Friday, February 17, 2017

"மறுவார்த்தை பேசாதே"- பாடலும் பாடமும்

பல நாள் பின்னே என்னை ருசிக்கிணற்றில் மூழ்கடித்த இசைக்கவிதை..
என்னை மறுபடியும் எழுதத் தூண்டிய "மறுவார்த்தை பேசாதே"- A Patch Up With My மடிக்கணினி..

பிரிந்த காதலி தேடி வர மாட்டாளோ எனும் ஏக்கம் எல்லோருக்கும் இருக்கும்..அப்படி அவள் வந்தால்...
ஏன் பிரிந்து சென்றாய்? என கோபத் தீயில் சுடாமல் அனைத்துக்கொள்ளும் காதலன், அவன் கதறலை காதலோடு மொழியும் பாடல் "மறுவார்த்தை பேசாதே மடிமீது நீ தூங்கிடு" 


படம்: என்னை நோக்கிப் பாயும் தோட்டா 

இசை: தார்புக சிவா 

எழுத்து: தாமரை 

பாடகர்: சித் ஸ்ரீராம் பிரிவின் வலி ஒருபுறம். வந்து விட்டாள் என்ற ஆனந்தம் மறுபுறம். மீண்டும் வலி காண நேரிடுமோ! எனும்அச்சம் மண்டையின் பின்னே ஒரு ஓரத்தில்..இப்படி செய்வதறியாத நிலையில் அவன்.. 

சித் ஸ்ரீராம் தன் அமைதிக்குரலில் ஆழமாய் பதிவிட தாமரையின் வரிகளில்.. அவன் அவள் மேல் கொண்ட காதலும் புரிதலும்.

பாடலின் பின்னே ஒரு "Fast beat" இசை.. இரு இதயங்களின் உணர்வு போராட்டத்தின் மருவடிவாய்.. திரு தர்புகா சிவா அவர்களுக்கு நன்றி. 

அவள் அவன் முன்னே நிற்கிறாள்.. எல்லாம் கனவு போல் தோன்றுகிறது. அவன், 'கனவாய் இமை மூடி அதில் உனைக் காப்பேன்' எனச் சொல்லி அவளை அனைத்துக் கொள்கிறான்... அவன் கண்ணில் அவள்..
மறு வார்த்தை பேசாதே! மடிமீது நீ தூங்கிடு!
இமை போல நான் காக்க.. கனவாய் நீ மாறிடு !
மயில் தோகை போலே விரலுன்னை வருடும்! 
மனப்பாடமாய் உரையாடல் நிகழும்..
தன் கையால் அவள் முகத்தை மீண்டும் ஒரு முறை வருடுகிறான்.. 
இது நாள் வரை அவள் மீண்டும் வருவாளோ எனக் கனவுகளில் கண்ட நொடிகள் நிகழ்கிறது.. 
ஏற்கனவே பல முறை வாழ்ந்தார் போல்.. இருவரும் "மனப்பாடமாய்" பேசிக்கொள்கிறார்கள்...முதல் நான்கு வரிகளிலேயே சிலிர்க்க வைக்கும் வித்தை தாமரை அவர்களுக்கு தான் வரும். 
விழிநீரும் வீணாக இமைத்தாண்டக் கூடாதென..
துளியாக நான் சேர்த்தேன்..கடலாகக் கண்ணானதே..!
அழுகை வந்தால் அடக்கும் பழக்கம் வளர வளர நம்மைப் பிடித்துக்கொள்ளும்.. அப்படி உணர்ச்சிகள் எல்லாம் அழுகையாய் வருகிறது.. அவன் அடக்க அடக்க முயன்று "கடலாக கண்ணானதே!" 
காதலை பிரிந்தாலும் அவர்களின் எண்ணம் என்றும் நம்மை துரத்திக்கொன்டே இருக்கும்.. அதுவே பிரிவின் வலி.. அவன் அவளிடம் சொல்கிறான்.. 'உன்னை நான் நினையாத நாளும் இல்லை உன்மேல் கொண்ட அன்பு பொய்யும் இல்லை' என்று.. 
அவர்கள் இருவரும் சேமித்த விலையில்லா நொடிகளை உறைக்கிறான்.. 
விடியாத காலைகள்..
முடியாத மாலைகளில்..
வடியாத வேர்வைத் துளிகள்..
பிரியாத போர்வை நொடிகள்!
ஒரு குட்டி காதல் கதை நான்கே வரிகளில். நீளும் நாட்களும்.. முடியா இரவுகளும்..மூழ்கடிக்கும் காமமும்.. 
மணிக்காட்டும் கடிகாரம் தரும்வாதை அறிந்தோம்..
உடைமாற்றும் இடைவேளை அதன் பின்பே உணர்ந்தோம்!
கடிகாரம் சொல்லி தான் உடை மற்றும் நேரம் ஆகிவிட்டதென உணர்ந்தோம்.. ஆடைகளால் கொண்ட இடைவெளி தந்த வாதை அறிந்தோம்..
"காதலெனும் பிரிவிலியில் கடிகார நேரம் கிடையாதே" என முன்பு எழுதிய தாமரையில் காமம் அணைத்த காதல் 17 வருடங்களாகியும் ருசி மாறாது இருப்பதைக் கண்டு நெகிழ்கிறேன்.. 
மறவாதே மனம்..
மடிந்தாலும் வரும்..!
முதல் நீ...! முடிவும் நீ...!
அலர் நீ...! அகிலம் நீ...!
அவன் சொல்கிறான்... உன்னை என்னால் மறக்கவே முடியாது.. இறப்பிலும் நீ இருப்பாய்.. என் எல்லாமும் நீ.. என் உல்லாசமும் நீ.. என் உலகமும் நீ.. 
அதைக் கேட்ட எனக்கோ...இப்படிச் சொன்னால் எப்படி விட்டுப் போக தோன்றும்? 
தொலைதூரம் சென்றாலும்...
தொடுவானம் என்றாலும் நீ...
விழியோரம்தானே மறைந்தாய்..
உயிரோடு முன்பே கலந்தாய் ...!
நீ எங்குப் போனாலும்.. அந்த வானதுக்கவே போனாலும் எ ன் கண்ணுக்கு தானே எட்டாமல்போக இயலும்..  நீ தான் என்ற என் உயிருடன் கலந்துவிட்டாயே.. எங்குப் போனாலும் எப்படிப் பிரிய இயலும்? 
இதழ் என்னும் மலர்கொண்டு.. 
கடிதங்கள் வரைந்தாய்!
பதில் நானும் தருமுன்பே 
கனவாகி கலைந்தாய் ..!
உன் காதலெல்லாம் இதழ் முத்தங்களால் கடிதமாக்கி கொடுத்தாயே.. என் காதல் என்னவென்று நான் சொல்லும் முன்னே பிரிந்தாயே.. என தன் ஏக்கத்தைக் கதறலை கொட்டுகிறான்..
ஏனோ "என் அன்பை நான் சொல்ல உன் காலம் போதாது" வைரமுத்து சொன்ன வரிகள் என் மனதை எட்டுகிறது.. 
பிடிவாதம் பிடி !
சினம் தீரும் அடி!
இழந்தோம்.. எழில்கோலம் !
இனிமேல் மழைக் காலம்..!!
எவ்வளவு கோபம் வந்தாலும் வெறுப்பு வந்தாலும் உன் காதலன் தானே.. பிடிவாதம் பிடிக்க வேண்டியது தானே.. கேட்கவில்லை என்றால் கோபம் தீரும் வரை வேண்டும் என்றால் அடித்துக்கொள்.. ஆனால் பிரிந்து மட்டும் செல்லாதே இனி..
இப்பிரிவில் நிறைய அழகிய நொடிகளை இழந்துவிட்டோமே.. இனிமேல் அன்பு அதிகரித்து மழையாய் பொழியும்.. அதனால் "மறுவார்த்தை பேசாதே மாடி மீது நீ தூங்கிடு" என் கண்ணெனப் பார்த்துக் கொள்கிறான்.. என்னோடு நீ இரு.. 
முற்றும் 

என்னை ஈர்த்த சில அம்சங்கள்..

இப்பாடலில் ஒரு காதலன் காதலியைப் பிரிந்து கனவில் பாடும் பாடலாக இருக்கலாம்.. இல்லை உண்மையில் காதலி நேரில் வந்திருக்கலாம்.. 
எவ்வளவோ "சூப்" பாடல்கள் வருகின்றன.. அப்படிப் பிரிந்தாலே காதல் பொய்த்துவிட்டது எனக் கொச்சைப் படுத்தாமல், பிரிவிலும் அன்பு நிலையானது என உணர்த்துகிறது தாமரையின் வரிகள். 
மீண்டும் அவள் வந்தால் அவளைத் திட்டி துன்புறுத்தாமல் காதலை கண்ணியத்துடன் கையாள வேண்டும், என அழகாய் புரிய வைக்கிறது இப்பாடல். 
அதற்காக ஏக்கம் இல்லை கோபம் இல்லை என்றில்லை. எப்படி எல்லாம் இருந்தோம்... நீ இல்லாமல் நான் தவித்துப் போனேன், எனக் கூறி.. இழந்த காலங்கள் போதும் இனிமேல் மழைக் காலம். எதுவும் பேசாமல் அமைதியை அணைத்துக்கொண்டு சில நொடிகள் இருப்போம். என நேர்மறையாய் முடிகிறது.. 
இதை எல்லாம் தாண்டி.. இருவருக்குள் கருத்து வேறுபாடு வந்தால், அதை எப்படிக் கையாள வேண்டும் என இரண்டே வரிகளில் சொல்லி இருக்கிறார்கள் தாமரை.. "பிடிவாதம் பிடி சினம் தீரும் அடி" இதை விட அழகாய் எப்படிச் சொல்ல முடியும்? கோபம் வரும்போதெல்லாம் பிரிவு ஒரு முடிவில்லை என்று..
"தள்ளிப் போகாதே" போதயின் தள்ளாட்டமே இன்னும் தெளிய வில்லை. அதற்குள் பேச கூட முடியாமல் வாயடைத்தார் போல் "மறுவார்த்தை பேசாதே." 
சித் ஸ்ரீராம்.. ஏன்னா குரல் பா.. இந்த குரலைக் கேட்டால் காதலிக்காதவர்களுக்கும் காதல் நோய் பற்றிவிடும் போல்..
Ondraaga Entertainment & திரு தர்புகா சிவா- உங்களுக்கு கோடானு கோடி நன்றி!
இப்போ இந்தப் பாட்டு என்ன எப்படி ரசிக்க வைத்தது என்று சொல்லி விட்டேன்.. அடங்காத ஈர்ப்பு என்னை அழைக்கிறது... மீண்டும் ஒரு முறை "மறுவார்த்தை பேசாதே" கேட்க.. 
நீங்களும் நல்ல Headphones இல்ல Woofer ல போட்டு கேளுங்க..  

எழுத்தில் சந்திக்க மீண்டும் ஒரு நாள் வரும் வரை..
மறுவார்த்தை பேசாமல் விடைபெறும்.. 
அன்புத் தோழி, 
சாரா