Saturday, June 18, 2016

நாணிக்காமல் ஏற்கிறேன் முதன் முதலாய்...

என் அன்னையோடு ஓர் கோவில் பயணம். 
பற்பல ஜோசிய பெருமக்களை பார்ப்பதும், அவர்கள் கூறும் தோஷங்களை எண்ணிப் பதறுவதும், 'எத்தை திண்ணால் பித்தம் தெளியும்' என பரிகாரங்கள் பல செய்வதும், நான் பசியோடு இருந்தால் பாசமாய் அவள் செய்து தரும் கத்திரிக்காய் சாதம் போல் அவள் என்மேல் கொண்ட அளவற்ற அன்பின் வெளிபாடு. என் மகள் எக்குறையும் இன்றி சந்தோஷமாய் இருக்க வேண்டும் எனும் நப்பாசையின் விளைவு. 
அப்படி ஓர் பரிகார பயணமாய் இராமேஸ்வரத்திற்கு சென்றோம். 

ஒரு தீட்சிதர் வீட்டில் தங்கினோம். அங்கே என்னைப் போல் ஒரு சிறு பெண் இருந்தாள். மறு நாள் அதிகாலை விரதம், தோஷ நிவர்த்தி பரிகார பூஜை, கோவிலில் உள்ள தீர்த்தங்களில் புனித நீராடல், இறுதியில் கடலில் நீராடி பழைய துணிகள் விலக்கி புத்தாடை அணிந்துகொண்டால் பழைய ஆடைகளோடு தோஷங்களும் விலகிச் செல்வதாய் அய்தீகம். இந்த வழக்கம் எனக்கு பழகி போன ஒன்று என்றே கூறலாம். இராமேஸ்வரத்தில் ஏனோ எனக்கு அந்த அலை மோதாக் கடல் ஓர் பேரானந்தம். ஆங்கிலத்தில் கூறவேண்டுமென்றால் "Subtle Tides”. கடல் என்றாலே அலாதி இன்பம் கொள்ளும் எனக்கு, இராமேஸ்வரக் கடல் ஒரு படி மேல்! 

தீட்சிதர் வீட்டு வாசலிலிருந்து பார்த்தால் கடல் கண் முன் மின்னிக் கொண்டு நாட்டியமாடும். தீட்சிதர் வீடு, அந்தகாலத்து அழகில், நீளமான மரக்கதவுகள், தூண்கள், பழைய ஸ்டைல் சுவிட்சுகள் என எளிமையும் கலை அழகும் நிறைந்திருந்தது. 

நல்லதோர் பௌர்ணமி மாலை. எனை மறந்து நிலவு பார்த்த படியே கடல் நோக்கி நின்றேன். 
என்னதான் என் அன்னையின் இறை ஈடுபாட்டை பல முறை ஏளனம் செய்தாலும், சிறு வயதிலிருந்து பாட்டி சொல்லித் தந்த பக்தி பாடல்களும், தாத்தா கூறிய இராமாயண, மகாபாரதக் கதைகளும், பள்ளியில் சொல்லிக் கொடுத்த சுலோகங்களும் பஜனைகளும் பசுமரத்தாணியாய் என்னுள் பதிந்திருந்தது என்று உணர்ந்து அதை மறைக்க, மறக்க முயன்று தோற்றுப் போன பல தருணங்கள் உண்டு. 

எங்கோ ஒலிக்கும் கோவில் பாடல் கேட்கும் போது என்னை அறியாமல் சேர்ந்து பாடுவதும், பக்திப் படங்கள் பார்த்தல் என்னை மறந்து மெய் சிலிர்த்துப் போவதும், ஆனந்த நீர்த் துளிகள் சிந்துவதும், நான் மட்டும் அறிந்த இரகசிய பக்தி அனுபவங்கள். 

அப்படி என்னுள் என்னை மீறி ஊறிப் போய் இருக்கும் இறை பக்தியைக் கண்டு நெகிழ்ந்தும் பயந்தும், அதற்காகவே சில காதல்களை புறக்கணித்தும் இருக்கிறேன். சில நாட்கள் ஏதும் நினையாமல் அமைதியாய் ஓர் ஆற்றங்கரை, ஆசிரம வாசம், என செல்லவதற்கு தூண்டும் அளவிற்கு உரமிட்டு வளர்த்திருக்கிறேன் இந்த பக்தியை. 

அப்படி ஒரு பக்தியில் கடல் கண்டு நான் நிற்க, கண்டு கொண்டேன் என் அழகிய வேலனை. திருசெந்தூர் முருகன்... என் இஷ்ட தெய்வம்!

அவர் இராஜ அலங்காரத்தில் நிற்க மறந்து போனேன் சில கனங்கள். முருகனவன் சிரித்த படியே நின்றான். கிரீடம், பட்டாடை, தங்கத்தாலான ஆபரணங்கள் என இராஜ தோற்றம் கொண்டு அவன் நிற்க பிரமிப்பும் ஆச்சரியமும் சூழ சிலிர்த்துப் போனேன். 

திடீரென்று செந்தூரப்பன் ஆவர் அப்பன் தோற்றம் கொண்டார்! நீண்ட சிகையும், தீர்க்க புருவங்களும், ஞானத்தின் உருவாய் ஒளிரிடும் கண்களும், நீலக் கழுத்தும், நிகரற்ற ஆண்மை தாங்கிய தேகமும் என்னை மெய் சிலிர்க்கச் செய்தது சிவ பெருமானின் விஸ்வரூபத் தோற்றம். என்னை அறியாமல் கைகள் கோர்த்து ஈசா என நின்றேன். கண்ணில் ஆனந்த நீர் பெருகியது.

ஈசனடி போற்றி!
எந்தையடி போற்றி!
நேசனடி போற்றி!
சிவன் சேவடி போற்றி!
நெகிழ்ந்து நின்றேன் என் தேவனவன் முன்னே! 

ஈசன் மறைய நாரணன் தோன்றினான். வெண்ணிறத் தேகம் தங்க ஒளி பெற்று ஜொலித்து அழகின் உருவாய் நின்றான். வீழ்ந்து விட்டேன் அவன் அழகில்! ஆனந்தக் கடலில் மூழ்கலானேன்!
மைத் தீட்டிய கண்கள், அழகிய சுருள் கேசம், வண்ண வண்ண நூலில் கோர்த்த மனிகாளால் ஆன அதிகமாய் இல்லாமல் அங்கங்கே அவன் அழகுக்கு அழகு சேர்க்க மெல்லிய ஆபரணங்கள்,  வெண்ப்பட்டு பீதாம்பரத்தில் பேரழகனாய் நின்றான். அவன் கண்ணின் ஒளி கண்டு அவன் தாண்டி காண அழகில்லை எனத் தோன்றியது…

அப்படியே அவன் அந்த சலனமற்ற கடலில் இறங்க, சில கனங்கள் கண்ணனவன் எனை நோக்கி வருவதை உணர்ந்தவளாய் உறைந்துப் போனேன்…

அவன் நடந்து வந்து, தீட்சிதர் வீட்டு உள்ளறைக்குள் நுழைந்தான். அவன் போன திசையில் விசையீர்தார் போல் என் கண்களும் போனது. கைகள் நிமிர்த்தி தங்கக் குழளினை எடுத்து இசைத்தபடியே நின்றான் என் கண்ணன். உலகம் உலவும் சொர்க்கமாய் மாறியது. கண்ணா எனக் கண்கள் விரித்து வியப்பில் நின்றேன்... எனை மீறிய மௌனம் என்னை வதைத்தது. வலிக்கு மறுந்திட்டார் போல் அவன் இசை என் மனதை நெகிழச் செய்தது. கைகள் நீட்டி அழைத்தான். அவன் மேல் கொண்ட காதலில் கேள்விகள் இன்றி கால்கள் அவன் பக்கம் சென்றது. 

என் கை பற்றி ஆடலானான்...
அடைந்தேன் மோட்ஷத்தை!

எனை மறந்து பக்தியில் நெகிழ்ந்து சில கனங்கள் ஆடலில் திளைத்தேன். கால்கள் தரையில் இல்லை. அவன் கையில் சுழலும் திருச்சக்கரம் போல் நானும் மிதந்த படியே சுழலலானேன். ஒரு சூஃபி துறவியைப் போல் இயற்கையில் இணைந்த ஓர் ஆடல். மெய் சிலிர்க்கச் செய்தான்... இப்படி தான் மீராவிற்கு நிகழ்ந்ததோ! கோபியர்கள் இதனால் தான் கண்ணன் மேல் காதலாய் இருந்தனரோ! என்னே ஓர் ஆனந்தம்... ஆன்மீகம் மேகமாய் ஆக மிதந்தேன் நான் மழைப் போல்!

உடலணிந்த ஆடைப் போல் 
எனை அணிந்து கொள்வாயா இனி நீ? கண்ணா 
தூங்காத என் கண்ணின் 
துயிலுரித்த கண்ணன் தான் இனி நீ…

விஸ்வரூபம் படத்தின் பாடல் வேதமாய் ஒலிக்க, அவன் ஒளியில் உலகு மறந்து கிடந்தேன்!
திடீரென்று என் இறை நிலையை தடுத்து நிறுத்த ஓர் கைப் பற்றியது. கண்ணனவன் இன்னும் என் பக்கம் நின்று கொண்டிருக்கிறான். ஆனால் அவளோ என்னை 'என்ன கனவா' எனக் கேள்வி கேட்கிறாள். அந்த சின்னப் பெண்...தீட்சிதர் வீட்டு பெண்... அவள் என் கைப் பற்றி மறுபடியும் ஒரு முறைக் கேட்டாள் 'அக்கா, என்ன கனவா?' என்று. என் கண்ணனைப் பார்த்த படியே நான் உறைந்து நின்றேன். 

தீட்சிதர் வந்தார். நான் அவரிடம் நேரமற்று துடிக்கும் இதயம் போல் 'நான் கண்ணனைக் கண்டேன்.. முதலில் முருகன்... பின் ஈசன்.. பின் கண்ணன்.. என் நாரணன் நம்பி வந்தான்! நாங்கள் இராச லீலையில் ஆழ்ந்தோம்!' என்றேன் ஆனந்தமாய். அந்த சிறு பெண் சொன்னாள்- எல்லாம் உன் மனதின் மருட்சி! அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை. பயணக் களைப்பில் கனவு காண்கிறாய். தீட்சிதரும் நம்பவில்லை. இறுதியில் நானும் கனவென்று நினைத்து உள்ளே சென்றேன். கண்ணனவன் காணாமல் போனான்.. 
அன்னையிடம் கூறினேன் கனவொன்று கண்டேன் என்று... அந்த சிறு பெண் வேராரும் அல்ல, நீ தான், என்றாள். திகைத்துப் போனேன்!

உன்னுள் இருக்கும் இறுக்கம்! பக்தி வேண்டாம் என எண்ணத் தூண்டும் கேள்விகள் நிறைந்த குழப்பங்களின் கூடாரம். நான் கடவுள் எல்லாம் வனங்குபவள் அல்ல என பெருமைப் பேசிக் கொள்ளும் ஆடம்பரம். அவள் தான் அந்தப் பெண். உன் பக்திக்கு "hallucination" எனப் பெயரிட்ட உன் மனதின் மறுப் பக்கம். 

"பின் அந்த தீட்சிதர்…”? அவர் வேராரும் அல்ல உன்னைச் சுற்றி உள்ள, நீ காணும் உலகம், உன் சமுதாயத்தின் எண்ணங்களாய், நீ நினைப்பது எல்லாம் அவர் உருவில் நின்று இருக்கிறது. அவர்கள் கூறுவது தான் மெய் என நம்பினாய், கனவென்று கண்ணனை மறந்தாய்" எனறாள். தலையில் அடித்தார் போல் இருந்தது ஒரு கணம். 

ஆம்... எல்லாம் என் மனதின் பிரதிபலிப்புகள் என உணர்ந்தேன். 
அன்னை தொடர்ந்தாள்... பக்தி, காதல், அறிவியல், ஆன்மிகம், இலக்கியம் எல்லாம் ஒரு நம்பிக்கையின் அடித்தளம். நம் வாழ்வின் இலக்கணம் கூறும் பல mediumகள். எது பற்றி சென்றாலும் இறுதியில் நம் மனதில் குழப்பங்களும் சலனங்களும் இல்லாமல் இருந்தால் மட்டுமே இன்பம் கிட்டும். இது சரி... இது தவறு... என்று எல்லாம் ஒன்றையே தான் மொழிகிறது! மொழிகள் தான் வேறு! இதில் இது பெரிது! இது சிறிது! என கூச்சமோ ஏளனமோ ஏதுமில்லை... 

உன் மனம் கூறும் வழி பற்றி இன்பம் காண தைரியம் வேண்டும், என்றாள்...
எனக்கென்று ஒரு வழி அமைத்து அதைப் பற்றி செல்ல ஆய்த்தமானேன்... நான் நம்புவதை தைரியாமாய் ஏற்கும் வழி. என் முடிவுகளுக்கு பொறுபேற்கும் மறைக் கற்றேன். 
மறுநாள் பரிகாரம், என் நம்பிக்கை வட்டத்தில் இல்லை என்றாலும், இராமேஸ்வரம் ஆலய தரிசனம் என் மனம் நிறைக்கச் செய்தது என நாணிக்காமல் ஏற்கிறேன் முதன் முதலாய்... 

மீண்டும் கண்ணன் வந்தால் 
என்ன கீதோபதேசம் கிட்டும் 
எனும் எதிர்பார்ப்பில் 
எழுதிக் கொண்டிருக்கும் 
அன்பு தோழி 
சாரா 

2 comments:

  1. Excellent post Sarah!! Everyone goes through the stage of believer, non-believer, believer :) Enjoyed reading it and agree with your perception on God :)

    ReplyDelete