Wednesday, June 29, 2016

ஏக்கம்

சிறு வயதிலிருந்து நானும் அவனும் நெருங்கிய பழக்கம். சேதுபதி IPS படம் பார்த்து தலையணைச் சண்டைகள் போட்ட பசுமை நாட்கள் அவை. நாங்கள் எங்கேனும் ஓட்டலுக்குச் சென்றால் அவன் கேட்பதையே நானும் கேட்பேன், அதற்கு அவன் கோபமும் கொள்வான். அவனுக்கு எது வாங்கித் தந்தாலும் அவன் அம்மா எனக்கும் அது போல் ஒன்று வாங்கிக் கொடுப்பாள். 

கேட்டால்... “எனக்குப் பெண் பிள்ளை என்றால் கொள்ளை ஆசை ஆனால் எனக்கோ இவன் மட்டும் தான், தம்பி தங்கை கூடாது என்று விட்டான், அவனுக்கு மட்டுமே நாங்கள் அம்மா அப்பா’வாம். அதனால் நீ எனக்கு மகள் போல்! மகளில்லாக் குறையை உன்னிடம் தீர்த்துக் கொள்கிறேன்” எனச் அடிக்கடி சொல்லி சிரிப்பார்கள். 

அவன் மட்டுமே இளவரசனாக இருந்த அந்த வீட்டில் நானும் இளவரசியாய் முடிசூட்டப் பெற்றேன். ஒரு பத்து வயது வரை எல்லாமும் அவனுக்கென இருந்ததெல்லாம் நாங்கள் சந்தித்தப் பின்னே என்னிடமும் பங்கிடப்பட்டது.  

சில சமயங்களில் கோபம் சில சமயங்களில் பொறாமை, அவனை ஆட்க்கொண்டாலும் அவை எல்லாவற்றையும் தூக்கி சாப்பிடும் அளவுக்கு நட்பு எங்களுக்குள் இருந்தது. என் அம்மாவும் அவன் அம்மாவும் அடிக்கடி கூறும் வார்த்தை “அவன் Tom இவள் Jerry”. 

விளையாட்டு நேரம் போக நாங்கள் அதிக நேரம் கழித்தது Tom & Jerry பார்த்து தான். இரண்டு பேருக்கும் பிடித்த ஒரு Cartoon. அது போல் ஒரு விடுமுறை நாள் அன்று அவன் வீட்டில் அவன் அம்மா சூடாக தோசை சுட்டு தர நாங்கள் வழக்கம் போல்  Tom & Jerry பார்த்துக் கொண்டிருந்தோம். சுடச் சுடத் தட்டை என் சார்ட்ஸ் போட்ட மடியில் அவன் வைத்து சிரித்தான். சுருக்கென சூடு பட ஓ! எனக் கத்தி அழுதேன். சில நொடியில் எரிவு போனாலும் அவன் அன்னை வந்ததால் இன்னும் அழுதேன். ஓடி வந்து என்னாச்சு மா? யார் என்ன செய்தார்? எனக் கேட்ட படியே அவனை மொறைத்தார். பாவம் பையன் மாட்டிக் கொண்டான்.. ஹி.. ஹி.. ஹி… 

விளையாட்டு வினையாய்ப் போகும் எனச் சொல்வார்களே.. அது தான் அன்று அவனுக்கு நேர்ந்தது. பெண் பிள்ளையை இப்படி பன்னலாமா? இது தான் நான் உனக்கு சொல்லிக் கொடுத்ததா? எனக் கேள்வி மேல் கேள்வி.. பின் ஏன்டா இவளை சீண்டினோம் என அவனே எண்ணிக் கொண்டு ‘சாரி’ சொல்லி முடிக்கும் பல அனுபவங்களில் இதுவும் ஒன்று. 

எங்கேனும் பொருட்காட்சிக்கு சென்றால், என்னையும் அழைத்துச் செல்வார்கள். என் அன்னையும் நம்பிகையாய் அனுப்பி விடுவாள். அவனுக்கு எது வாங்கினாலும் எனக்கும் அது போல் ஒன்று கிட்டும். நான் ரொம்பவும் பொறுப்பு, எல்லாவற்றையும் எளிதில் தொலைத்து விடுவேன். ஆனால் அவன் எனக்கு அப்படியே எதிர்மறை. சோ.. என்னுடையவற்றை தொலைத்தவுடன் அவனுடையது வேண்டும் என அவன் அம்மாவிடம் கேட்டு அடம் பிடித்து வாங்கி.. அதையும் பாழ் செய்து விடுவேன். என்மேல் அவனுக்கு எக்கச் சக்கமாய் கோபம் வரும். ஆனால் நான் தான் பெண் பிள்ளை ஆயிற்றே! தொட்டால் கெட்டான் அன்னைக் கையால் அடி நிச்சயம். 

அவனுடன் ஆசையாய் விளையாட சென்று அது சண்டையில் முடிந்தால் நகங்களால் கீரியும் பல்லால் கடித்தும் என் பலம் காட்டுவேன், ஆத்திரத்திலும் வலியிலும் அவன் திருப்பி அடித்தால் கத்தி அழுது திட்டும் வாங்கிக் கொடுப்பேன்.  

சில நேரங்கள் என்னால் அவன் அழுததுண்டு. சில நேரம் நான் அறிந்தும், அறியாமலும் அவனை அழவைத்ததுமுண்டு. பல நேரங்களில் பாதி மனமாய் எல்லாம் எனக்கு விட்டுக் கொடுத்தான். சில நேரங்களில் சிறு பிள்ளை எனப் பாசமாய் பார்த்துக் கொண்டான். 

அவன் வகுப்பிற்கு சென்று இது வேண்டும் அது வேண்டும் என நின்றிருக்கிறேன். பிடிக்கவில்லை என்றாலும் பொருத்துக் கொண்டான். பள்ளிக்குச் செல்லும்போது பஸ் ஸ்டாப்பில் என் பக்கம் நின்று நான் எரிச் செல்லும் வரை அடைக்கலமாய் நின்றான். என் எல்லா எழுச்சியிலும் எனக்குத் துணையாய் நின்றான் திசைகள் காட்டினான். என் கலங்கரை அவன். என் காலத்துக்கும் மறவா நண்பன் அவன். 

தங்கை தம்பி வேண்டாம் எனச் சொன்ன பிள்ளைக்கு திடீரென தங்கை என என்னைக் காட்டி சொன்னார்கள்.. விட்டுக் கொடுக்க மனமின்றி வேறு வழியின்றி அவனுக்கென்றே உரிமையான, அவன் அப்பா அம்மாவையும் கூட என்னிடம் பகிர்ந்துக் கொண்டான். என் முதல் நண்பன்- என் அண்ணன்.  

என் முதல் நட்பு.... கடவுள் நம்பிக்கை வருவதற்கு என் தாய்க்குப் பின்னே மற்றொரு காரணம்... என் அண்ணன். இரண்டு சுழி முன்னிற்கு பதிலே பின்னே விறைப்பாய் இருக்கும் அது மட்டுமே வித்தியாசம் அண்ணனுக்கும் என் அன்னைக்கும். 

இன்றும் அடித்துப் பிடித்து சண்டைப் போட்டுக் கொண்டாலும் என்றும் அவன் சொன்னால் வேதமாய்த் தோன்றும் நம்பிக்கை அந்த நட்பில் மட்டும் தான் கண்டேன். தினமும் தொலைபேசியில் சாப்பிட்டாயா? எனக் கேட்டு அன்பு காட்ட அவனுக்குத் தெரியாது, கடை கடையாய் ஏறி இறங்கி பரிசு வாங்கும் எண்ணங்களும் அவனுக்கு வாராது, நான் எங்கு செல்கிறேன் என்ன செய்கிறேன் என என்னை தொல்லை செய்யும் பொசபொசப்பும் அவனிடம் கிடையாது, ஆனால் அவன் எண்ணங்களில் நானும் என் எண்ணங்களில் அவனும் என்றும் கடிகாரமாய் அடித்துக் கொண்டே இருக்கின்றோம். தன்னுடைய எல்லாவற்றையும் எனக்கு தாரைவார்த்துக் கொடுத்து என்னை தாரைவார்த்துக் கொடுக்கும் போது கண் கலங்கும் ஓர் அற்புத ஆடவன்.  

ஆனால்...  
இனிமேல் அவன் எண்ணங்களில் என்னைத் தாண்டி அவள் இருப்பாள். பொறாமையா? இல்லை.... சிறியதாய் நட்பு பகிர்ந்து போன ஒரு ஏக்கம். பசியில் வாடும்  பிள்ளையாய் சொல்லத் தெரியாமல் ஒரு கதறல், உள்ளே. அவள் என்றால் அவனுக்கு, களிப்பு. எனக்கும் தான். ஏனோ, எனக்கு அவன் விட்டுக் கொடுத்த பல சந்தோஷங்களுக்கு ஈடாய் அவள் வருகை இருக்கும் என அறிந்தும் ஓர் ஏக்கம். கடைசியில் நான் பங்குக்கு சண்டைப் போட முடியாத அவனுக்கென்று ஒரு உறவு.  
இன்னும் சிலநாட்களில் அவன் திருமணம்… 
10 வயதிலிருந்து எனக்கென, ஒவ்வொன்றுக்கும் அவன் சுமந்த அந்த ஒன்று என்று என்னைத் தாக்கியது.  
இது தான் ஏக்கம் போலும்! 
A Brother is a childhood friend.. 
A Bunch of Joy.. 
The first friend with whom every memory shared, 
Stays forever!  
கடல் தாண்டி இருக்கும்  
அண்ணன் மேல்  
கடலளவு அன்பு கொண்ட  
அன்புத் தோழி, 
சாரா 

2 comments:

  1. unarvuhalin korvai arumai..
    தொல்லை செய்யும் பொசபொசப்பும் அவனிடம் கிடையாது
    posaposappu vattara vazhakku nadai payan paadu vairamuthu nadai,paambin nelivu pola oru ezhithu nadai.
    பசியில் வாடும் பிள்ளையாய் சொல்லத் தெரியாமல் ஒரு கதறல், unarvu yethartha velippadu.

    arumai


    ReplyDelete